நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு, பல தளர்வுகளுடன் ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த தளர்வு அடிப்படையில் மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கியபோதும், சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் ஏப்ரல் மாதம் தொடங்கி தமிழ்நாட்டில் தங்கியிருந்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வங்கதேசம், ஃபிரான்ஸ் உள்பட பல நாடுகளை சேர்ந்த ஏழு ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் அவர்களது சொந்த நாட்டிற்கு சிறப்பு விமானங்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதேபோல் வெளிநாடுகளில் சிக்கிதவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மத்திய அரசு கடந்த மே ஏழாம் தேதிமுதல் வெளிநாடுகளில் தவிப்பவர்களை அழைத்து வர வந்தே பாரத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.