ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்த நிலையில், உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30 முதல் ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்காக, இந்தத் தொடரில், பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது வீரர்கள் பட்டியலை கடந்த மாதமே அறிவித்து, தற்போது தொடரை எதிர்நோக்கி உள்ளன.
இதில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த மாதம் 15ஆம் தேதி பிசிசிஐ அறிவித்தது. தோனியின் மாற்று வீரராக தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்த் இவர்களில் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்.
இது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில்,
"இக்கட்டான தருணத்தில், தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடும் திறன் கொண்டவர். இதனால்தான் அவரை இந்திய அணியின் தேர்வுக் குழு தேர்வு செய்தது. அவரிடம் அனுபவம் உள்ளது. உலகக் கோப்பை தொடரில் ஒருவேளை தோனிக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால், அவரது இடத்தை தினேஷ் கார்த்திக் நிரப்புவார். அவர் பலமுறை மேட்சை ஃபினிஷ் செய்வதுள்ளார்" என்றார்.
தோனி கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்பே தினேஷ் கார்த்திக், 2004ஆம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அறிமுகமானார். இந்திய அணிக்காக 91 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 9 அரைசதம் என 1738 ரன்களை அடித்து, 61 கேட்ச், 7 ஸ்டெம்பிங் செய்துள்ளார்.
முன்னதாக, அனுபவத்தின் காரணத்தால்தான் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தோம் என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.