உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இந்திய அளவில் கரோனா வைரஸ் பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டத்தை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் அதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் மிகத் தீவிரமடைந்து வருகிறது.
தேனி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா பரவல் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.
குறிப்பாக நீதிமன்றம், காவல் ஆணையர் அலுவலகம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் என பலரும் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உத்தமபாளையம் விரைவு நீதிமன்ற பெண் நீதிபதி, நீதிமன்றத்தில் பணியாற்றும் தட்டச்சர், சின்னமனூர் வனச்சரகத்திற்குட்பட்ட வனக்காவலர், டி.சிந்தலைச்சேரி வங்கி ஊழியர், குரங்கணி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் என நேற்று ஒரே நாளில் 188 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்று நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களில் அதிகபட்சமாக பெரியகுளம், போடி, கம்பம், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட 118 பேருக்கும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்துவந்ததை அடுத்து, அவர்களது சளி, ரத்த மாதிரிகள் தேனி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்கள் அனைவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
கோவிட்-19 பாதிப்பிற்குள்ளான அலுவலர்கள் பணியாற்றிவந்த அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், அவர்களது குடியிருப்பு பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தேனி நகராட்சிப் பகுதிகளைக் கடந்து தற்போது கிராமப்புறங்களிலும் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்து வருவதாக அறிய முடிகிறது.
தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக இதுவரை 3 ஆயிரத்து 87 பேர் பாதிக்கப்படும், 41 பேர் உயிரிழந்தும் உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.
பெருகி வரும் கரோனா நோய்த்தொற்றால் தேனி மாவட்ட மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.