ஜூலை மாத தொடக்கத்தில் நாமக்கல் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120ஆக இருந்தது. இந்நிலையில், கடந்த 20 நாள்களாக தொற்று பரவல் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, கடந்த 16ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரையிலான ஐந்து நாள்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110ஆக உயர்ந்துள்ளது.
நாமக்கல்லில் கடந்த 5 நாள்களில் 110 பேருக்கு கரோனா! - நாமக்கல்லில் அதிகரிக்கும் கரோனா
நாமக்கல்: மாவட்டத்தில் கரோனா தொற்று அதிவேகமாகப் பரவிவரும் நிலையில், கடந்த ஐந்து நாள்களில் 110 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கரூரில் உள்ள தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்ற 30க்கும் மேற்பட்டோருக்கும் பள்ளிபாளையம், வெப்படை, இருக்கூர் உள்ளிட்ட இடங்களில் தொழிற்சாலைகளில் பணியாற்றிய 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் மாவட்டக் காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் வருபவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட எல்லைகளில் 37 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, 35 கட்டுப்பாட்டு மண்டலங்களில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.