தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்: கேரள அரசு முடிவு

திருவனந்தபுரம்: கோவிட்-19 ஊரடங்கால் கேரள பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க ஆன்லைன் வகுப்புகளை மேற்கொள்ள அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

By

Published : Jun 2, 2020, 1:21 PM IST

கோவிட்-19 நெருக்கடி : மாணவர்களுக்கு கல்வி வழங்கும் கேரளாவின் அதிரடி திட்டம்
1

இந்தியாவை அச்சுறுத்திவரும் கரோனா பாதிப்பால் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் கோவிட்-19 பரவலின் தீவிரம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் அவர்களின் அன்றாட வாழ்வு இன்னும் முடக்கப்பட்டே உள்ளது.

குறிப்பாக, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், கோவிட்-19 ஊரடங்கால் கேரள பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க ஆன்லைன் வகுப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களைச் சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், "கரோனா நெருக்கடி காலகட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி வழங்க ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்.

ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு ஆசிரியர்கள் மாணவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்து அவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தினை செயல்படுத்துவார்" எனத் தெரிவித்தார்.

கேரள உள்கட்டமைப்பு மற்றும் கல்விக்கான தொழில்நுட்பத்தின் (கைட்) துணைத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அன்வர் சதாத் கூறியபோது, "மின்சாரத் தட்டுப்பாடு உள்ளிட்ட இன்ன பிற காரணங்களினால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுக்க முடியாத மாணவர்களுக்கு அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்து தரப்படும்.

கேரளாவில் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் கொண்ட 16,000 பள்ளிகள் உள்ளன. அவற்றின் உதவியோடு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.

இதுபோன்ற திட்டங்களைச் சாத்திப்படுத்துவதை நாம் கனவில்கூட கண்டிருக்க மாட்டோம். ஆனால், நாம் அதனைச் சாத்தியப்படுத்த, விரைவாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

மாணவர்களுக்கான பாடத்திட்ட கால அட்டவணைகளை அனைத்து வகுப்பிற்கு ஏற்றாற்போல் தயாரித்து வழங்கியிருக்கின்றோம்.

அதன்படி முதல் நாளிலிருந்தே ஒன்றாம் வகுப்புமுதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களும் அரைமணி நேரம் என்ற பகுப்பில் கைட் டிவி மூலமாக அனைவருக்கும் ஒளிபரப்பப்படும்.

நாள்தோறும் இந்த ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும். இந்த ஆன்லைன் வகுப்புகளை ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் நடத்துவர். ஆன்லைனில் மட்டுமல்லாமல் ஆஃப்லைனில் தொலைக்காட்சிகளின் உதவியோடும் இவை ஒளிபரப்பாகும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள் ஒரு பாடத்தை 30 நிமிடங்கள் நடத்துவார்கள்.

அவர்கள் தங்களுடைய மாணவர்கள் அனைவரும் இதில் பங்கு கொள்கிறார்களா? என்பதை உறுதிசெய்வார்கள். இந்த ஆன்லைன் வகுப்புகளில் அவர்கள் பங்கு கொள்கிறார்கள் என்பதை உறுதிசெய்ய தேவையான தொழில்நுட்ப உதவிகளும் அவர்களுக்கு ஏற்பாடு செய்து தரப்படும்.

வகுப்பின் முடிவில் ஆசிரியர்கள், மாணவர்களை தொலைத்தொடர்பின் வழியே தொடர்புகொண்டு தாங்கள் நடத்திய பாடங்களில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களைப் பூர்த்திசெய்வர்.

மாணவர்கள் யாருடைய வீட்டில் எல்லாம் தொலைபேசி, தொலைக்காட்சி இல்லையோ அவர்களுக்கும் அந்தத் திட்டத்தின்கீழ் பாடங்களைக் கற்பிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மடிக்கணினிகள், 80 ஆயிரம் புரஜெக்டர்கள், 45 ஆயிரம் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருப்பதாக அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அவை இதற்குப் பயன்படுத்தப்படும்.

அதைப்போல ஆசிரியர்கள் அனைவருக்கும் இன்னொரு பணியும் வழங்கப்பட்டுள்ளது, அதாவது பள்ளி மாணவர்கள் யாருடைய வீட்டில் தொலைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி இல்லையோ அவர்களை எல்லாம் கண்டறிந்து, அவர்கள் அனைவரையும் ஒரே வீட்டில் கல்வி கற்க ஏற்பாடு செய்து தரவேண்டும்.

அந்த வீட்டில் ஐந்து முதல் பத்து மாணவர்கள் வரை அமரும்படி ஏற்பாடுகள் செய்து 30 நிமிடம் அவர்களுக்குப் பாடமெடுக்க வேண்டும்" என்றார்.

கேரள மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேரா. ரவீந்திரன் பேசுகையில், "இந்த ஆன்லைன் வகுப்புகள் அனைத்தும் தற்காலிகமானவையே. கோவிட்-19 நெருக்கடி நிலை மாறும்போது இயல்பான கல்வி அளிக்கும் கட்டமைப்புகளுக்குள் நாம் மீண்டும் செல்வோம். இந்தத் திட்டம் ஒரு மாற்று ஏற்பாடு மட்டுமே; நிரந்தரமானதல்ல.

சூழ்நிலை சரியான பிறகு மாணவர்கள் அனைவரும் தங்களுடைய பள்ளி வகுப்புகளுக்குத் திரும்பலாம். இந்த ஆன்லைன் வகுப்புகளில் ஏற்படும் அனைத்துக் குளறுபடிகளும் வெகு விரைவில் சரிசெய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் ரமேஷ், "பள்ளிகள் இயல்பாக இயங்கும்போது, மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து படிக்கும் கல்வியை நான் மிகவும் விரும்புகிறேன். அந்தக் கல்விக் கற்றலில் கிடைக்கும் அனுபவம் இந்த ஆன்லைன் வகுப்புகளில் எனக்குக் கிடைக்கவில்லை. நான் பள்ளிகள் மீண்டும் பழையபடி இயங்க, விரைவில் திறக்கப்பட வேண்டும் என்றே விரும்புகின்றேன்" எனக் கூறினார்

இந்த கைட் டிவி சேனலானது, 2005ஆம் ஆண்டு கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி ஆட்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமால் தொடங்கிவைக்கப்பட்டது.

ஆன்லைன் வகுப்புகளின் நான்கரை லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details