தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

அரசின் தவறை சுட்டுக்காட்டினால் வழக்கு தொடுப்பீர்களா ? - பி.ஆர். நடராஜன் கேள்வி - Covai news

கோயம்புத்தூர் : அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டி விமர்சித்தால் சர்வாதிகாரப் போக்கில் காவல்துறையை வைத்து வழக்கு தொடுப்பீர்களா என நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்
அரசின் தவறை சுட்டுக்காட்டினால் வழக்கு போடுவீர்களா பி.ஆர்.நடராஜன் கேள்வி

By

Published : Jun 2, 2020, 7:50 PM IST

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ராசாமணியை நேரில் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் இன்று வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதும் மாவட்ட செயலாளர்கள் மீதும் அதிகாரம் தங்கள் கையில் என்ற மனப்பாங்கில் சர்வாதிகாரமாக வழக்குப் பதிவு செய்வதை அதிமுக அமைச்சர்கள் கைக்கொண்டுள்ளனர். உதாரணமாக, மாநகராட்சி நிர்வாகத்தால் இதுவரை நிறைவேற்றப்பட்ட 400 தீர்மானங்களை, மாநகராட்சி நிர்வாகம் இன்னும் ஏன் மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றவில்லை என கேள்வியெழுப்பிய சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு எவ்வகையிலும் ஏற்று கொள்ளப்பட்டதென தெரியவில்லை.

அரசாங்கத்தின் நிர்வாகத்தில் நடப்பதை கேள்விக்கேட்டால், விமர்சித்தால் காவல்துறை கொண்டு நடவடிக்கை எடுப்பதா ? இது தொடர்பில் மாவட்ட நிர்வாகம் பதில் சொல்லியே தீர வேண்டும். கரோனா ஊரடங்கு நீட்டிப்பு தொடரும் நிலையில், கோவையில் சிக்கித் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க அரசு இன்னும் துரிதமாக செயலாற்ற வேண்டும்.

கரோனா நெருக்கடி காலத்தை பயன்படுத்தி மின்வாரியத் துறை மிகப் பெரிய கொள்ளை முயற்சியை நடத்தி கொண்டிருக்கிறது. கட்டணம், புது இணைப்பு, சீரமைப்பு வேலை என அனைத்திலும் ஊழல் மலிந்துக்கிடக்கிறது. எனவே, இதில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய தீர்வை எடுக்க வேண்டும். மழை, பலத்த காற்றினால் கோவையில் பல விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு பேரிடர் மேலாண்மை மூலம் நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

விவசாயிகளுக்கு கட்டாயமாக இலவச மின்சாரம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பது சலுகை அல்ல இந்நாட்டின் விவசாய உற்பத்தியை பலப்படுத்தும் செயலாகும். இந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்வது நிதியமைச்சரின் தவறான செயல்.

கோவிட்-19 பாதிப்பில் கோவையை பச்சை குறியீட்டு மண்டலம் என்று வெறுமனே பரப்புரை மட்டும் கொள்ளக்கூடாது. கோவை மண்டலம் இன்னும் பச்சை குறியீட்டு மண்டலமாக மாறவில்லை என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவரே நிரூபித்துள்ளார்.

எனவே, கோவையில் கட்டாயமாக கரோனா வைரஸ் கண்டறிதல் சோதனையை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முழுமையான கண்டறிதல் சோதனை மேற்கொள்ளாமல் கோவையை பச்சை மண்டலம் என்று மார்த்தட்டி கொள்ளக் கூடாது" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details