இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா தடுப்பு மற்றும் மேலாண்மை பணிகளை தொடர்ந்து அரசு மேற்கொண்டு வருகிறது.
கரோனா தொற்றுடன் நுரையீரல் பாதிப்பு உள்ள நோயாளிகளின் உயிரிழப்பை தவிர்க்கும் பொருட்டு ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதில் அரசு போர்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
இப்பணிகளுக்காக முதலமைச்சர் ஏற்கனவே, ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வலுப்படுத்தும் நோக்கில் உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகளை கொள்முதல் செய்வதற்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் ரூ. 76.55 கோடி மதிப்பீட்டில் 2414 கருவிகளை வாங்குவதற்கு கொள்முதல் ஆணை பிறப்பித்து, இதுவரை 530 கருவிகளை வாங்கி அளித்துள்ளது.
பொதுவாக, சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளுக்கு தேவைப்படும் போது குழாய்கள் ஆக்சிஜன் வழியாக வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் ஆக்சிஜன் அதிகபட்சமாக ஒரு நிமிடத்திற்கு 12 லிட்டர் வரை மட்டுமே வழங்க இயலும்.
கரோனா நோயாளிகளுக்கு உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவி மூலம் அதிகபட்சமாக ஒரு நிமிடத்திற்கு 60 லிட்டர் ஆக்சிஜன் வழங்க இயலும்.