இந்திய-சீன எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்திய அரசு நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்களை உஷார்படுத்தியுள்ளது. பன்னாட்டு விமான நிலையங்களில் உள்ள சரக்ககப்பிரிவு தீவிர கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களை வெளியே அனுப்புவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் சென்னை விமான நிலைய பன்னாட்டு சரக்ககப் பிரிவுக்கு சீனாவிலிருந்து இறக்குமதியாகும் கண்டெய்னர்கள், பார்சல்கள் அனைத்தையும் தீவிரமாக ஆய்வுசெய்து பரிசோதனை செய்ய வேண்டும்.
சுங்கத் துறை உயா் அலுவலரின் அனுமதியின்றி டெலிவரி கொடுக்கக்கூடாது. சந்தேகத்திற்கிடமான கண்டெய்னர்கள், பாா்சல்களைத் திறந்துபார்த்து சோதனையிட வேண்டும். பார்சல்களில் உள்ளே என்ன பொருள்கள் உள்ளன, அதன் தரம், எந்த அளவு உள்ளது. யார் யாருக்காக அனுப்பியது, முறையான ஆவணங்கள் அனைத்தும் உள்ளனவா? என்று மிகவும் கவனமாக ஆய்வுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சரக்கு விமானங்களில் வெளிநாடுகளிலிருந்து சென்னை விமான நிலைய சர்வதேச சரக்ககத்திற்கு வரும் கண்டெய்னர், பார்சல்களை வழக்கமாகச் சுங்கத் துறையினர் ஆய்வுசெய்து டெலிவரி எடுப்பதற்கான அனுமதி உத்தரவை (ஓஓசி, அவுட் ஆப் சாா்ஜ்) வழங்குவார்கள்.