புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று கடந்த சில நாள்களாக அதிகரித்துவருகிறது. நேற்று கரோனா பாதிப்பு எண்ணிக்கை 112 ஆக இருந்த நிலையில், இன்று 49 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 200ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் இன்று 49 பேருக்கு கரோனா உறுதி! - மல்லாடி கிருஷ்ணாராவ்
புதுச்சேரி: இன்று ஒரே நாளில் 49 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால், கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 200ஆக உயர்ந்துள்ளது.
காரைக்கால், ஏனாம், மாஹே பகுதிகளில் எவருக்கும் தொற்று இன்று உறுதிசெய்யப்படவில்லை. கதிர்காமம் பகுதியில் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் 373 பேர், ஜிப்மர் மருத்துவமனையில் 111 பேர், காரைக்காலில் 37 பேர் என 563 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரேநாளில் 30 பேர் குணமடைந்ததால், குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 619ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தலா ஒருவர் என இரண்டு பேர் 24 மணி நேரத்தில் இறந்துள்ளதால், மாநிலத்தில் இதுவரை கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.