தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

CWC19: ஓப்பனிங்கிலேயே ஆட்டத்தை முடித்த நியூசிலாந்து!

கார்டிஃப்: உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நியூசிலாந்து!

By

Published : Jun 1, 2019, 7:54 PM IST

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது லீக் போட்டி வேல்ஸ் நாட்டின் கார்டிஃப் நகரில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் திமுத் கருணரத்னே 52 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து அணி சார்பில் லோக்கி ஃபெர்குசன், ஹென்ரி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, 137 ரன்கள் இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியில் கப்தில், முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இவ்விரு வீரர்களும், ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இலங்கை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

கப்தில் - முன்றோ

இதனால், நியூசிலாந்து அணி 16.1 ஓவர்களிலேயே விக்கெட் ஏதும் இழக்காமல் 137 ரன்களை எளிதாக எட்டியது. இதன் மூலம், நியூசிலாந்து அணி இப்போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் கப்தில் எட்டு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 73 ரன்களிலும், ஆறு பவுண்டரிகள், ஒரு சிக்சர் என முன்றோ 58 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர்.

‘அந்த குரங்கு உன்னையும் விட்டுவைக்கலாயா...’ என்ற வடிவேலுவின் வசனத்தைப் போல், இவ்விரு வீரர்களும் யார்க்கருக்கு பெயர்போன மலிங்காவை ஒரு கை பார்த்துள்ளனர். அவர் வீசிய ஐந்து ஓவர்களில் இவ்விரு வீரர்களும் ஆறு பவுண்டரி உட்பட 46 ரன்களை விளாசித் தள்ளியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details