இது தொடர்பாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சுகாதாரத்துறை செயலரும், மாவட்ட ஆட்சியருமான அருணுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கரோனா வைரஸ் தொற்றுநோய் - டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், நோய் பாதிப்பால் அதிகரிக்கும் உயிரிழப்பிற்கான காரணம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நோய் தடுப்பு முன்னெடுப்பில், பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஆரம்பம் சுகாதார நிலையங்கள் முக்கியப் பங்காற்றி வருவதால், அவற்றின் பணிகளை மேம்படுத்த இன்று முதல் கிரேட் முறையை அமல்படுத்தி, தரவரிசைப்படுத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் துறை சார்பில் நகரப் பகுதியில் தொற்று பரவியுள்ள இடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. கோவிட்-19 கண்டறிதல் பரிசோதனை ஆய்வின்போது களப்பணியாளர்கள் ஆக்சி மீட்டர், தெர்மல் ஸ்கேனர் கொண்டு சென்று பரிசோதிக்க வேண்டும்.
கணக்கெடுப்பு படிவத்தை ஆவணமாக பாதுகாக்க வேண்டும். உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கரோனா தகவல் மேலாண்மை திட்டத்தை ஒரு வாரத்தில் அமல்படுத்த வேண்டும்.
தேவையான பரிசோதனைக் கருவிகளை கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.