இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா இன்று (ஆக.24) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மத்திய அரசின் பிரதமரின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 5 முதல் 10 குதிரைத்திறன் கொண்ட திறந்தவெளிக் கிணறுகள் ஆழ்குழாய் கிணறுகளில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை 70% அரசு மானியத்தில் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு 2020 -2021 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 199 சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சூரிய சக்தியால் இயங்கும் ஐந்து முதல் பத்து குதிரைத்திறன் வரையுள்ள ஏ.சி மற்றும் டி.சி நீர்மூழ்கி பம்பு செட்டுகள் மற்றும் தரை மட்டத்தில் அமைக்கும் மொனாப்ளாக் பம்பு செட்டுகள் இதுவரை மின் இணைப்பு பெறப்படாத நீர் பாசனத்திற்காக ஆதாரங்களுக்கு 70% மானியத்தில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் இலவச மின் இணைப்பு கோரி ஏற்கனவே விண்ணப்பித்துள்ள விவசாயிகள், அவர்களது உரிமையை துறக்க வேண்டிய அவசியம் இல்லை.