பொருளாதார மற்றும் சமூக நிலைகளில் பின்தங்கி இருப்பவர்களை முன்னேற்றும் நோக்கில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை தருவது உள்ளிட்ட சில உரிமைகளை மத்திய, மாநில அரசுகள் அளிக்கின்றன. இவற்றைப் பெறுவதற்கு சாதிச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் அவசியமாகிறது.
வருமானச் சான்றிதழானது பள்ளி, கல்லூரியில் சேர்வதற்கும், கல்விக் கடன்கள் பெறுவதற்கும் மாணவர்களுக்கு அதிக அளவில் பயன்படுகிறது. மேலும், அரசின் நல உதவிகள் பெறுவதற்கும், அரசுப்பணிகளில் பணியமர்த்தப்படுவதற்கும் இன்றியமையாத ஒன்றாகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜூன் 4 ஆம் தேதியிலிருந்து நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ வழங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தற்காலிகமாக வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுறுத்தி இருந்தார்.
இதைத் தொடர்ந்து குடும்ப வருமானம், சொத்து சான்றுகள் வழங்கப்படுவதை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு வருவாய் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில் மீண்டும் அவற்றை வழங்கலாம் என அறிவுறுத்தியுள்ளது.
அவ்வாணையில், "பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு வருவாய் சான்றிதழ் வழங்கலாம் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த சான்றிதழ்கள் மத்திய அரசாங்கத்தில் வேலைக்கு விண்ணப்பிப்பதற்காக அல்லது மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் அனுமதி பெறுதலுக்குப் பயன்படுத்தி கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்குள் பெறும் பொதுப் பிரிவைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியோர் என கருதப்பட்டு, அவர்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.