இந்தியா முழுவதும் இயங்கிவரும் தனியார் விமான சேவைகளில் கோ ஏர் விமான சேவையும் ஒன்று. இந்நிறுவனம் குறைந்த கட்டணத்தில், விமான சேவை வழங்குகிறது. தற்போது, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த ஊரடங்கு உத்தரவால் சென்னையில் கோ ஏர் விமானம் ஏர்லைன்ஸ் இயங்காமல் இருந்துவந்தது.
இதனால், சென்னை விமான நிலையத்தில் கோ ஏர் விமானத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர் 86 பேர் பணியிலிருந்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் விமான சேவை தொடங்கிய பின்னர் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணிகள் வழங்கப்படும் என்றும் கோ ஏர் விமானம் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி விமானத்தில் பணிபுரிந்துவந்த ஒப்பந்த ஊழியர்கள் 86 பேரும் பணியிலிருந்து நீக்கப்படுவதாக கோ ஏர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதிலிருந்து மூன்று மாதம் கோ ஏர் நிறுவனம் தங்களுக்கு ஊதியமும் வழங்கவில்லை என ஒப்பந்த ஊழியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும் அவர்கள் சென்னை விமான நிலையத்திலுள்ள கோ ஏர் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவருகின்றனர். திடீரென கோ ஏர் விமான நிறுவனம் தங்களைப் பணியிலிருந்து நீக்கியதால், வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் ஒப்பந்த ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:பெரம்பலூரில் பணமோசடி செய்த வழக்கில் இருவர் கைது!