தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முதல் ஆயிரத்து 633 முழு மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகள் மூலமாக 7 லட்சத்து 39 ஆயிரத்து 354 குடும்ப அட்டைதாரர்களுக்கு மூன்றாம் கட்டமாக விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகிய பொருள்கள் வழங்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் உள்ள கூட்டுறவு நியாய விலை கடையில் விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. முன்னதாக பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
அதனடிப்படையில் ரேஷன் கடையின் முன்பு நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று, முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியை கடைப்பிடிப்பதற்கு வட்டங்கள் வரையப்பட்டு, ஏற்கனவே டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே விலையில்லா ரேஷன் பொருள்களை வாங்கிச் சென்றனர்.
கடந்த மாதம் ரேஷன் பொருள்கள் கடையில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது மூன்றாம் கட்டமாக விலையில்லா ரேஷன் பொருள்கள் நியாயவிலை கடைகளிலேயே வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் சிவப்பு மண்டலமாக மாறி நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து 429 ஆக உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து, முறையாக ரேஷன் பொருள் வாங்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.