வேலூர் மாவட்டம் அணைக்கட்டுப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞருக்கும் நேற்று (ஜூலை 2) காலை பள்ளிகொண்டா பகுதியில் உள்ள பெருமாள் கோயிலில் சிறுமியின் அனுமதியின்றி, கட்டாயத்திருமணம் நடைபெற இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இது குறித்து காவல் துறையினர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதனடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற சமூக நலத்துறை அலுவலர்கள் நடைபெற இருந்த குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தி, சிறுமியை மீட்டு அரசு அனுமதி பெற்ற காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் சிறுமிக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்க முயற்சித்தது குறித்து குழந்தைகள் நல குழுமத்திற்குத் தகவல் கொடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விளாபாக்கம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, மண்காட்டுச்சேரி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, திருப்பத்தூர் மாவட்டம் அங்கராவரம் பகுதியைச் 16 வயது சிறுமி என இவர்கள் மூவருக்குமே கட்டாய குழந்தைத் திருமணம் நடைபெற இருப்பதாக அந்தந்த பகுதி காவல் துறையினருக்கு, வந்த ரகசியத் தகவலின்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அரசு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:தனிமைப்படுத்தப்பட்ட கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி குற்றச்சாட்டு!