பாஜகவில் மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவந்த, வேதாரண்யம் சட்டப்பேரவை தொகுதியின் முன்னாள் உறுப்பினர் எஸ்.கே. வேதரத்தினம் பாஜகவிலிருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார்.
இவர் வேதாரண்யம் தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை திமுகவின் ஒன்றியச் செயலாளராக இருந்தவர். திமுக சார்பில் 1996, 2001, 2006 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்று தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக பதவிவகித்தார்.
நான்காவது முறையாக 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து திமுகவில் இருந்து விலகி சுயேட்சையாக போட்டியிட்டு இரண்டாவது இடம் பிடித்து வெற்றி வாய்ப்பை இழந்தார்.
திமுகவில் இருந்து விலகியவர், 2015 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதனிடையே தொடர்ந்து வேதரத்தினம் பாஜகவில் மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்த நிலையில், சமீபத்தில் பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில் அவருக்கு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பொறுப்பு கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் தேசிய பொதுக்குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த வேதரத்தினம், தனது ஆதரவாளர்களுடன் பேசி மீண்டும் திமுகவில் இணைவது என முடிவெடுத்து திமுகவில் வேதாரண்யம் நகர திமுக அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று மாலை தன்னை மீண்டும் திமுகவில் இணைத்துக்கொண்டார்.