இதுகுறித்த விளக்கமளித்த தமிழ்நாடு வனத்துறை, '73.06 ஏக்கர் மொத்தப் பரப்பளவு கொண்ட வேடந்தாங்கல் ஏரி பொதுப்பணித்துறையின் பாசன ஏரிகளில் ஒன்று.
இந்த ஏரி கடந்த 1998ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி தமிழ்நாடு அரசின் அரசாணை எண்.199இன்படி (வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி) 'வன உயிரின சரணாலயமாக' அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பில், ஏரியைச் சுற்றியுள்ள 5 கி.மீ., நிலப்பரப்பில் உள்ள தனியார் பட்டா நிலம், வருவாய் நிலங்களும் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இதில் வன நிலங்கள் ஏதும் இல்லை. மத்திய அரசு அனைத்து சரணாலயங்களையும் மையப்பகுதி (Core Zone), இடை நிலைப்பகுதி (Buffer Zone), சுற்றுச்சூழல் பகுதி (Eco-Sensitive Zone) ஆக வகைப்பாடு செய்யும்படி அறிவுறுத்தியது. அதற்கானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அதன்படி வேடந்தாங்கல் சரணாலய ஏரியைச் சுற்றியுள்ள 5 கி.மீ., நிலப்பரப்புகள், 0-1 கி.மீ., தூரம் மையப்பகுதி எனவும்; 1-3 கி.மீ., தூரம் இடை நிலைப்பகுதியாகவும், 3-5 கி.மீ., சுற்றுச்சூழல் பகுதி எனவும் வகைப்பாடு செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை 5 கி.மீ., சுற்றளவு பரப்பு குறைக்கப்படுகின்றது என்பது மிகவும் தவறான கருத்து. மேற்கூறிய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட அரசாணையில் உள்ள இடங்கள் எதுவும் வனக்காப்பு நிலங்கள் இல்லை. பொதுப்பணித்துறை பாசன ஏரி பரப்பளவான 73.06 ஏக்கரைச் சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் பரப்பளவும் சுமார் 28 கிராமங்களைக் கொண்ட வருவாய்த்துறை மற்றும் தனியார் நிலப்பரப்பாகும்.
இந்த நிலப்பரப்பில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களுடைய சொந்த வீடுகளிலும், விவசாய நிலங்களிலும் வசித்து வருகின்றனர். மேற்கூறிய 5 கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பில் உள்ள நிலப்பரப்பில் வன நிலங்களோ, வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களோ, எதுவும் கிடையாது. 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 5 கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பளவில் உள்ள பொதுமக்கள் 1998ஆம் ஆண்டுக்கு முன்பாகவே தங்களுடைய வாழ்வாதாரமான விவசாயம் மற்றும் பல்வேறு சிறு தொழில்கள் மற்றும் தங்கள் சொந்த இடங்களில் வாழ்வதற்கான சிறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.