சென்னை சா்வதேச விமானநிலையத்தில் நேற்று(ஜூன் 6) மாலையிலிருந்து நள்ளிரவு வரை ஒரே நாளில் நான்கு சிறப்பு தனி விமானங்களில் 593 வெளி நாட்டவா்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பி சென்றுள்ளனா். சென்னையிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு 210 பேரும், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு 210 பேரும், தாய்லாந்தின் பேங்காக் நகருக்கு 108 பேரும், மலேசியாவின் கோலாலம்பூா் நகருக்கு 65 பேரும் புறப்பட்டு சென்றனா்.
இவா்களை அந்தந்த நாடுகளிலிருந்து காலியாக வந்த சிறப்பு விமானங்களில் அழைத்து செல்லப்பட்டனர். இந்த 593 வெளிநாட்டவா்களும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியவா்கள். கடந்த இரண்டரை மாதங்களாக சா்வதேச விமான சேவைகள் இல்லாததால், தங்கள் நாடுகளுக்குத் திரும்ப முடியாமல் இந்தியாவில் தவித்து கொண்டிருந்தனா்.
அந்தந்த நாடுகளின் தூதரக அதிகாரிகள் இந்திய அரசுடன் பேசி சிறப்பு அனுமதி பெற்று, தற்போது தங்கள் நாடுகளுக்குத் திரும்பியுள்ளனா். அதைப்போல் வெளிநாடுகளில் இந்தியா்கள் 633 போ் நான்கு சிறப்பு தனி விமானங்களில் சென்னை அழைத்து கொண்டு வரப்பட்டனா்.