கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஒன்றாம் தேதி முதல் தடையை மீறி மீனவர்கள் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முற்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் கடலூர் துறைமுகத்தில் சுருக்குமடி வலையுடன் இருந்த படகுகளை அலுவலர்கள் சீல் வைத்தனர்.
இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அலுவலர்களின் வாகனங்களை சிறை பிடித்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
இதில், சுருக்கு மடி வலைகள் தடை செய்யப்பட்டது அரசின் கொள்கை முடிவாகும். இதில் யாரும் தலையிட முடியாது. அதனால் இந்த வலைகளை பயன்படுத்தி யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். ஆனால் அதையும் மீறி நேற்று மீனவர்கள் சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
பின்னர் மீன்வளத்துறை அலுவலர்கள் நேற்று சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த மீன்களை எங்கும் விற்பனை செய்யக்கூடாது, அந்த மீன்களை வியாபரிகள் வாங்கக்கூடாது என உத்தரவிட்டனர். ஆனால், அதையும் மீறி மீனவர்கள் மீன்களை விற்பனை செய்தனர். இதையறிந்த மீன்வளத்துறை அலுவலர்கள் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி பிடித்த மீன்களை வாங்கிச் சென்ற 21 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.