தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து மத்திய அரசு அறிக்கை அளிக்க ஆணை

சென்னை: மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணத் தொகுப்பு வழங்குவது குறித்து 4 வாரங்களில் அறிக்கை அளிக்க, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Fisherman’s relief fund
Fisherman’s relief fund

By

Published : Jun 5, 2020, 9:50 PM IST

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் வீதம் நிவாரண உதவியாக வழங்கக்கோரி, மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்துவது குறித்தும், மெரினாவில் தள்ளுவண்டி கடைகள் அமைப்பது குறித்தும், புயலில் சேதமடைந்த பெசன்ட் நகர் - லூப் சாலையை மீண்டும் அமைப்பது குறித்தும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மாநகராட்சி ஆணையர் கரோனா பணிகளில் தீவிரமாக உள்ளதால், மெரினாவில் கடை நடத்துவோருக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்தும், நடமாடும் கடைகள் அமைப்பது குறித்தும் விரிவான அறிக்கை அளிக்க மூன்று வார காலம் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்று, நான்கு வார காலம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், ஒரு அலுவலரை நியமித்து திட்டத்தை வகுத்து, அதன் மூலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.

மீனவர் பாதுகாப்பு சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மீன்பிடி தடைக்காலத்தை கணக்கில் கொண்டு மீனவர்களின் குடும்பத்திற்கு நாள் ஒன்றிற்கு 500 ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, மீன்பிடி தடைக் காலத்தில், மீனவர்களுக்கான மத்திய அரசின் நிவாரணத்தொகுப்பு குறித்து நான்கு வாரங்களில் தெரிவிக்க மத்திய அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை ஏழாம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details