கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகுகளை சீர்செய்ய வட்டியில்லா கடனாக ரூ. 6 லட்சம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மீனவர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
விசைப்படகுகளை சீர்செய்ய வட்டியில்லா கடன்: மீனவர் சங்கம் வலியுறுத்தல் - மீனவர் சங்கம்
கன்னியாகுமரி: ஆறு மாதங்களாக மீன்பிடிக்க செல்லாமல் இருக்கும் விசைப்படகுகளை சீர்செய்ய வட்டியில்லா கடனாக ரூ. 6 லட்சம் வழங்கக் கோரி மீனவர் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக அந்த மனுவில் கூறியிருப்பதாவது: "தேங்காய்பட்டனம் துறைமுகத்தில் சுமார் 750 விசைப்படகுகள் உள்ளன. இந்த விசை படகுகள் அனைத்தும் கடந்த ஆறு மாதங்களாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் இருப்பதால், அவை அனைத்தும் பழுதடைந்துள்ளன. இந்த படகுகளை உடனடியாக பழுது நீக்காவிட்டால் இயக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, இந்த பழுதுகளை சீரமைக்க வங்கியிலிருந்து வட்டி இல்லா கடனாக மத்திய, மாநில அரசுகள் ரூ. 6 லட்சம் வழங்க வேண்டும்.
அதேபோல, இந்த துறைமுகத்தில் 750 விசைப்படகுகள் இருக்கும் நிலையில் இதுவரை 40 படகுகளுக்கு மட்டுமே மானிய விலை டீசல் கிடைத்து வருகிறது. இதை அனைத்து படகுகளுக்கும் கிடைக்க வழிவகைச் செய்ய வேண்டும். இதற்காக கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தை காட்டி அரசு அனைவருக்கும் மானிய விலை டீசல் வழங்காமல் தட்டிக்கழித்து வருகிறது. எனவே, அனைத்து படகுகளுக்கும் மானிய விலையில் டீசல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.