திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த சிரணியம் கிராமத்தில், சென்னையைச் சேர்ந்த இளங்கோ என்பவருக்குச் சொந்தமான காகித தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு வெளிநாடுகளிலிருந்து வீட்டு அலங்கார காகிதங்களை கொள்முதல் செய்து தரம் வாரியாகப் பிரித்து, தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென காகித ஆலையிலிருந்து புகை வெளியேறுவதைக் கண்ட அப்பகுதிவாசிகள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாக மளமளவென பரவிய தீயால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த காகித பண்டல்கள் பற்றி எரியத் தொடங்கின.
பின்னர் செங்குன்றம், மாதவரம், மணலி, அம்பத்தூர் ஆகியப் பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த அதிநவீன தீயணைப்பு வாகனத்தின் உதவியோடு, தீயைக் கட்டுப்படுத்துவதற்காக ஜேசிபி இயந்திரத்தைப் பயன்படுத்தி, கட்டடத்தின் ஒவ்வொரு பகுதியிலும் துளையிட்டு, அதன் வழியாக தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, 10 மணி நேரமாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.