உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 20ஆவது லீக் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
இதில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரராக கேப்டன் ஃபின்ச் அதிரடியாக ஆடினார். மறுமுனையில், வார்னர் 26 ரன்களுக்கும், அவரைத் தொடர்ந்து வந்த உஸ்மான் கவாஜா 10 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதைத்தொடர்ந்து, ஸ்டீவ் ஸ்மித் உடன் ஜோடி சேர்ந்த ஃபின்ச், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 15ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில், ஸ்டீவ் ஸ்மித்தும் தன்பங்கிற்கு அதிரடியாகவே ஆடி ரன்களை குவித்தார்.
இவ்விரு வீரர்களும் மூன்றாவது விக்கெட்டுக்கு 173 ரன்களை சேர்த்தனர். ஒரு பக்கம் ஃபின்ச் அதிரடியாக விளையாடியதால், அவர் இப்போட்டியில் இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 153 ரன்கள் எடுத்திருந்த நிலையில், உதானா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
153 ரன்களில் ஆட்டமிழந்த ஃபின்ச் அவரைத் தொடர்ந்து, ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடினார். 25 பந்துகளில் ஐந்து பவுண்டரி, ஒரு சிக்சர் என 46 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 334 ரன்களை குவித்துள்ளது. இலங்கை அணி தரப்பில் உதானா, தனஞ்செயா டி சில்வா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.