தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'மிரட்டும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' - சேலம் செய்திகள்

சேலம்: வாகனங்களின் மீதான மாதத் தவணையோடு கூடுதல் வட்டி கேட்டு மிரட்டும் நிதி நிறுவனங்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மாவட்ட கால் டாக்ஸி (சீருந்து) ஓட்டுநர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

வாழ்வாதாரம் இழந்து நிற்கும் சேலம் மாவட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்கள்
வாழ்வாதாரம் இழந்து நிற்கும் சேலம் மாவட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்கள்

By

Published : Jun 2, 2020, 7:35 PM IST

கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக சேலம் மாவட்டத்தில் அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ளன. மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தனியார் பேருந்துகள், வேன்கள், கார்கள் இயக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, வாடகை கார்களின் இயக்கமும் தடைசெய்யப்பட்டுள்ளது.

வாழ்வாதாரம் முடங்கிப்போயுள்ள வாடகை கார் ஓட்டுநர்களிடம் தவணைத் தொகையோடு கூடுதல் வட்டியையும் கட்டச் சொல்லி நிதி நிறுவனங்கள் வற்புறுத்திவருவதாக அறிய முடிகிறது.

இந்நிலையில், அவ்வாறு மிரட்டும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் சீருந்து ஓட்டுநர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இது தொடர்பாக சேலம் சிறகுகள் ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ராஜா கூறுகையில், "சேலம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு காரணமாக வாடகை கார்கள் இயக்க முடியாமல் முடக்கப்பட்டுள்ளன. இதனால் வாடகை கார் ஓட்டுநர்கள் அனைவரும் கடந்த 60 நாள்களாக வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக இழந்து தவித்துவருகிறோம்.

வாடகை கார் ஓட்டுநர்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலையிலும்கூட மாதாந்திர கடன் தொகையை கட்டச் சொல்லி நிதி நிறுவனங்கள் கெடுபிடி செய்துவருகின்றன. கோவிட்-19 காரணமாக தமிழ்நாடு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிதி நிறுவனங்களின் உதவியோடு கடனில் சீருந்து வாங்கி ஓட்டிவரும் எங்களின் நிலை அறிந்து தமிழ்நாடு அரசு நிதி நிறுவனங்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக, ஊரடங்கு அமலில் உள்ள இந்த மூன்று மாத காலத்திற்கு மாதத் தவணை கட்டுவதற்கு அவகாசம் வழங்க வேண்டுமென கூறியுள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இருப்பினும் சில நிதி நிறுவனங்கள் கூடுதல் வட்டி கேட்டு சீருந்து ஓட்டுநர்களையும், அதன் உரிமையாளர்களையும் மிரட்டிவருகின்றன.

தமிழ்நாடு அரசின் உத்தரவையும் மீறி சீருந்து ஓட்டுநர்களை மிரட்டிவரும் நிதி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல சீருந்து உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் ஆயுள் காப்பீடு செய்துள்ளனர். ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் தவணை செலுத்த மூன்று மாத காலம் எங்களுக்கு கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details