தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 21, 2020, 10:09 AM IST

ETV Bharat / briefs

"கடன் பத்திரங்கள் வைத்திருப்பவர்கள் பொதுக்கடன் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்"

சென்னை: தமிழ்நாடு அரசுப் பங்குகள் தொடர்பான கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்கள், அவர்களுடைய கடன் பத்திரங்களை, 20 நாள்களுக்கு முன்னதாகவே, பொதுக்கடன் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என நிதித் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

"கடன் பாத்திரங்கள் வைத்திருப்பவர்கள் பொதுக்கடன் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்"- நிதித் துறை அறிக்கை வெளியீடு!
Finance department

தமிழ்நாடு அரசு, நிதித் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, வரையறைகளின்படி வழங்கப்பட்ட 2020ஆம் ஆண்டுக்குரிய 8.15 விழுக்காடு தமிழ்நாடு அரசுப் பங்குத் தொகையின் நிலுவைத் தொகையானது, 20.07.2020ஆம் நாள் உள்பட்ட உரிய நாளது வரையிலான வட்டித் தொகையுடன் திருப்பிச் செலுத்தப்படும் என்று பொதுத் தகவலுக்காக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து நிதித் துறை வெளியிட்ட அறிக்கையில், " மாநில அரசால், 1881ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ், மேற்சொன்ன நாளினை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருப்பின், அந்த மாநிலத்தின் தொகை செலுத்தும் அலுவலகங்களால், முந்தைய அலுவலகப் பணி நாளில் திருப்பிச் செலுத்தப்படும். 21.07.2020ஆம் நாளிலிருந்தும் அதற்குப் பின்னரும் இக்கடனுக்கு வட்டித்தொகை சேராது.

2007ஆம் ஆண்டு அரசு கடன் பத்திரங்களின் ஒழுங்குமுறை விதிகளின்படி, பங்கு முதல் சான்றிதழில், அரசு கடன் பத்திரங்களை வைத்திருக்கும் பதிவு பெற்ற நபர் ஒருவருக்கு, அவருடைய வங்கிக் கணக்கில் அல்லது மின்னணு பதிவு மூலம் நிதிகளை வரவு வைக்கும் வசதியுள்ள ஏதாவது ஓர் வங்கியில், கணக்கு வைத்திருக்கும் அவருடைய வரவுக் கணக்கில், உரிய விவரங்களை சேர்த்து, தொகை செலுத்துவதற்கான ஆணை வழங்குவதன் மூலம், முதிர்வுத் தொகை வழங்கப்படும்.

கடன் பத்திரங்களை பொறுத்தமட்டில், தொகை செலுத்தும் நோக்கத்திற்காக, அசல் சந்தாதாரர் அல்லது இத்தகைய அரசு கடன் பத்திரங்களை வைத்திருப்பவர், வட்டித்தொகை செலுத்துவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ள வங்கிக்கு அல்லது கருவூலத்திற்கு, சார் கருவூலத்திற்கு அல்லது பாரத ஸ்டேட் வங்கியின் கிளைக்கு நேர்விற்கேற்ப, அவர்களுடைய வங்கிக் கணக்கின் உரிய விவரங்களை அளிக்கவேண்டும்.

இருப்பினும், வங்கிக் கணக்கில் உரிய விவரங்கள் இல்லாத மின்னணு மூலம் நிதிகளை வரவு வைப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்படாத நேர்வில், உரிய நாளில் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவாக, 2020ஆம் ஆண்டு 8.15 விழுக்காடு தமிழ்நாடு அரசுப் பங்குகள் தொடர்பான கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்கள்.

அவர்களுடைய கடன் பத்திரங்களை, 20 நாள்களுக்கு முன்னதாகவே, பொதுக்கடன் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்காக கொடுக்கப்படும், கடன் பத்திரங்களின் பின் பக்கத்தில், கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு உரிய முறையில் எழுதி கையொப்பமிட வேண்டும்.

'சான்றிதழுக்குரிய அசல் தொகை பெறப்பட்டது’

பாரத ஸ்டேட் வங்கியின் கிளை ஒன்றில் கருவூலப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில், இக்கடன் பத்திரங்கள், பங்கு முதல் சான்றிதழ்கள் வடிவில் இருக்குமாயின், சம்பந்தப்பட்ட வங்கியின் கிளையில்தான் ஒப்படைக்க வேண்டுமே தவிர, கருவூலத்திலோ அல்லது சார் கருவூலத்திலோ ஒப்படைக்கக்கூடாது என்பதை குறிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும்.

கடன் தொகை திருப்பிச் செலுத்தக்கோரி, கடன் பத்திரங்கள் முகப்பிடப்பட்டுள்ள இடங்கள் நீங்கலாக, பிற இடங்களில் தொகையைப் பெற விரும்புவோர், கடன் பொறுப்பைத் தீர்க்கும் வாசகத்தை அப்பத்திரங்களின் பின்புறம் உரியவாறு எழுதி கையொப்பமிட்டு, சம்மந்தப்பட்ட பொதுக்கடன் அலுவலகத்திற்குப் பதிவு அஞ்சல், காப்புறுதி அஞ்சல் மூலம் அனுப்பவேண்டும்.

தமிழ்நாடு மாநிலத்தில், அரசு கருவூலகப்பணிகளை மேற்கொள்ளுகின்ற எந்தவொரு கருவூலம், சார் கருவூலம் அல்லது பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் செலுத்தத்தக்க கேட்புக் காசோலை ஒன்றை வழங்குவதன் மூலம், பொதுக்கடன் அலுவலகம், தொகை வழங்கும்" எனக் குறிப்பிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details