திண்டுக்கல் அருகேயுள்ள என்.பாறைப்பட்டி பகுதியில் வசிப்பவர் அய்யப்பன் (48). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் (25) இருசக்கர வாகனத்தை பழுது பார்க்கும் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், விக்னேஷ் வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு தந்தையுடனும், குடும்பத்தினருடனும் தகராறு செய்து வந்துள்ளார்.
அதேபோல், மதுஅருந்துவதற்கு பணம் கேட்டு அடிக்கடி சண்டையிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவும் (ஆக.4) வழக்கம்போல் மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு வந்த விக்னேஷ் தந்தையுடன் சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, காலையில் பார்த்த போது விக்னேஷ் தலையில் ரத்தக் காயத்துடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். அவர் அருகிலேயே ரத்தத்துடன் கல்லும் கிடந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விக்னேஷின் உடலைக் மீட்டு உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், மதுபோதையில் தகராறு செய்த மகனை தந்தை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, விக்னேஷை கொலை செய்த அவரது தந்தை தாமாகவே திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.