தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஐடிபிஎல் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! - IDPL Project

ஈரோடு: பாரத் பெட்ரோலிய நிறுவனம் ஐடிபிஎல் திட்டத்திற்காக குழாய்கள் பதித்து எண்ணெய் கொண்டு செல்வதைக் கைவிட வலியுறுத்தியும், திட்டத்தைக் கண்டித்தும் கருப்புக்கொடி ஏந்தியபடி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

IDPL Petrol Pipe Project

By

Published : Jul 7, 2020, 3:32 PM IST

பாரத் பெட்ரோலிய நிறுவனம் ஐடிபிஎல் என்கிற திட்டத்திற்காக தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம் இருகூரிலிருந்து ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக சுமார் 317 கிலோ மீட்டர் தூரம் விவசாய விளைநிலங்கள் வழியாக குழாய்கள் பதித்து எண்ணெய் கொண்டு செல்லும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தை ஏழு மாவட்ட விவசாயிகள் கடந்த பல மாதங்களாக எதிர்த்தும், கண்டித்தும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இந்த திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் ஐடிபிஎல் திட்டத்தைக் கண்டித்து ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள பசுவப்பட்டி, சென்னிமலைப் பாளையம், பூச்சக்கட்டு வலசுப் பகுதியிலுள்ள விவசாய விளைநிலத்தில் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தியபடியும், விளம்பரப் பதாதைகளை ஏந்தியபடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, திட்டத்திற்காக விவசாய விளைநிலங்களை வலுக்கட்டாயமாக நில எடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும். கெயில் குழாய் திட்டத்தின்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கெயில் குழாய்களை சாலையோரத்தில் அமைத்ததைப் போல இந்தத் திட்டத்திற்குமான குழாய்களையும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சாலையோரத்தில் பதித்திட வேண்டும்.

விவசாய வேளாண் நிலங்களைப் பாழ்படுத்தாமல் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாத்திடும் வகையில் திட்டத்தை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், விவசாய விளைநிலங்கள் வழியாக ஐடிபிஎல் குழாய்கள் கொண்டு செல்வது நிறுத்தப்படும்வரை தங்களது அஹிம்சை வழியிலான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று விவசாயக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:40 பேருக்கு கரோனா பரப்பியவர் மீது வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details