தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

திருப்பூரில் ஆவின் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: ஆவின் நிர்வாகம் பாலின் விலை, பால் கொள்முதலை குறைப்பதை கண்டித்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாலை சாலையில் ஊற்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Farmers Protest Against Aavin In Tiruppur
Farmers Protest Against Aavin In Tiruppur

By

Published : Aug 7, 2020, 7:10 AM IST

திருப்பூரில், தொடக்க பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் உள்ள உறுப்பினர்கள் மூலம் கிராமங்களில் விவசாயிகள் கறவை மாடுகள், எருமை மாடுகள் மூலம் உற்பத்தியாகும் பாலை தினசரி காலை மாலை கொள்முதல் செய்து திருப்பூர் ஆவின் நிறுவனத்திற்கு வழங்கி வருகின்றார்கள்.

தினந்தோறும் சுமார் 2 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் ஆவின் நிர்வாக மேலாளர் உத்தரவிட்டுள்ளதாக கூறி தொடக்க பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர்கள் தினசரி 20 விழுக்காடு பாலை குறைத்துக் கொள்ளுங்கள் எனக்கூறி பால் கொள்முதலை நிறுத்தியுள்ளனர்.

இதனால் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மாட்டுக்கு தேவையான கலப்புத்தீவனம், தவிடு, பருத்திக் கொட்டை, புண்ணாக்கு அனைத்தும் விலை உயர்ந்து விட்ட நிலையில் பால் கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்புவது விவசாயிகளுக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது.

அத்துடன் தொடக்கநிலை சங்கங்களுக்கு கொள்முதல் செய்யும் பாலுக்கு ஆவின் நிர்வாகம் உடனுக்குடன் பணம் அனுப்பாமல் சங்கத்தில் உள்ள சொந்த பணத்தை விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்ய அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் இருப்புத் தொகை இல்லாத சங்கங்களில் விவசாயிகளுக்கு பல வாரங்களாக பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை. இதனால் விவசாயிகள் அன்றாட செலவுக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் இதில் தலையிட்டு தொடக்க பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களிடம் அவர்கள் கொண்டு வரும் பாலை முழுவதுமாக கொள்முதல் செய்ய வேண்டும்.

20 விழுக்காடு பால் திருப்பி அனுப்புவது என்ற உத்தரவை திரும்ப பெறவேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் கொள்முதல் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பை திரும்ப பெறவேண்டும்.

கொள்முதல் செய்யும் பாலுக்கு ஆவின் நிர்வாகம் சங்கங்களுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவின் நிர்வாகத்தை கண்டிக்கும் விதமாக வீரபாண்டி அருகேயுள்ள ஆவின் நிலையம் முன்பு பாலை ஊற்றி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கட்சி சார்பற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு ஆவின் நிர்வாகம், தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details