தென் தமிழ்நாட்டில் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாகத் திகழ்வது முல்லைப் பெரியாறு அணை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே இந்த அணையை தனது சொத்துக்களை விற்று கட்டி முடித்தவர் கர்னல் ஜான் பென்னிகுவிக்.
பஞ்சத்தால் கொத்து கொத்தாய் செத்து மடிந்த மக்களின் வாழக்கை பசுமையாக மாறியது முல்லைப் பெரியாறு அணையினால் தான். இதன் காரணமாக தாகம் தீர்த்த தந்தையாக தென் மாவட்ட மக்களால் இன்றளவும் கர்னல் ஜான் பென்னிகுவிக் தெய்வமாக வணங்கப்படுகிறார். இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள அவரது கல்லறை கடந்த சில நாள்களுக்கு முன் சேதப்படுத்தப்பட்டதாக வெளியான தகவலால் தேனி மாவட்ட விவசாயிகள் கொதிப்படைந்தனர்.
மேலும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேனி எம்.பி.ஓ.பி.ரவீந்திரநாத்குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக்கின் மணி மண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்த விவசாயிகள், பின் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.