திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மானூர்பாளையம் கிராமம், குழந்தைபாளையத்தைச் சேர்ந்த விவசாயி ராஜாமணி கடந்த 4ஆம் தேதி ஆக்ஸிஸ் வங்கி கடன் வசூல் பிரிவு அலுவலர்கள் கொடுத்த நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்டார்.
விவசாயிகளின் போராட்டத்தால் குண்டடம் காவல் நிலையத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக வங்கி அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கடந்த எட்டாம் தேதியன்று மறைந்த விவசாயி ராஜாமணி வாங்கிய வங்கி கடன்களை ரத்து செய்யவேண்டும், அவரது குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், தற்கொலைக்கு தூண்டிய வங்கி அலுவலர்களை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரம் வங்கி கிளை முன்பு அனைத்து விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் பங்கேற்ற முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
அப்போது 13ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என கூறியதை அடுத்து, காவல் கண்காணிப்பாளர், தாராபுரம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர், ஆக்ஸிஸ் வங்கி கோவை சட்டப்பிரிவு துணைத் தலைவர் உள்ளிட்ட அலுவலர்களும், அனைத்து விவசாய சங்க தலைவர்களும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் விவசாயி ராஜாமணி பெற்ற வங்கி கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, 15 நாள்களுக்குள் ஆவணங்கள் மற்றும் தடையில்லா சான்று வழங்கப்படும், இழப்பீடு வழங்குவது குறித்த கோரிக்கை வட்டாட்சியர் மூலமாக வங்கி உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 15 நாள்களுக்குள் உரிய முடிவு எடுக்கப்படும், வங்கி ஊழியர்கள் மீதான காவல் துறை நடவடிக்கை இழப்பீடு வழங்குவது குறித்து தகவல் தெரிந்து பின்னர் முடிவு செய்யப்படும், வங்கி அலுவலர்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட அளவில் வருவாய் துறை, காவல்துறை, முன்னோடி வங்கி மற்றும் விவசாய பிரதிநிதிகள் அடங்கிய குழு உருவாக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்படும் என்ற உடன்பாடு ஏற்பட்டது.