தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தென்காசியில் விவசாயிக்கு இழப்பீடு வழங்கக் கோரி உறவினர்கள் போராட்டம்! - இழப்பீடு

தென்காசி: புளியங்குடி அருகே காட்டு மாடு தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுவதைத் தடுக்க கோரியும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Farmer Death Protest In Tenkasi
Farmer Death Protest In Tenkasi

By

Published : Jul 9, 2020, 3:52 AM IST

தென்காசி மாவட்டம், புளியங்குடி காயிதே மில்லத் நகர், 4-வது தெருவைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (71).

இவரது விவசாய நிலம் புளியங்குடியில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ளது. நேற்று (ஜூலை8) காலையில் சாகுல் ஹமீது விவசாய வேலைக்கு இரண்டு தொழிலாளர்களை அழைத்துக்கொண்டு தனது விவசாய நிலத்துக்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு மாடு சாகுல் ஹமீதை கொம்பால் முட்டித் தள்ளி தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் இது குறித்து உடனடியாக காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புளியங்குடி காவல் துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், காட்டு மாடு தாக்கியதில் உயிரிழந்த சாகுல் ஹமீது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும், வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கொல்லம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும், புளியங்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், கடையநல்லூர் வட்டாட்சியர் சுப்பிரமணியன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் வனத்துறை சார்பில் உயிரிழந்த விவசாயிக்கு பொது நிவாரணம் நான்கு லட்சம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், விளை நிலங்களுக்குள் வனவிலங்குகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இதையும் படிங்க:கல்லூரி மாணவியிடம் ஆபாசப் பேச்சு - உதவிப் பொறியாளர் பணியிடை நீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details