தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தப்பி ஓடிய விசாரணைக் கைதி, மீண்டும் சிறையில் அடைப்பு! - வேலூர் மாவட்டம் தொரப்பாடி

திருவண்ணாமலை: பிரசவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பியோடிய விசாரணைக் கைதியை, தனிப்படை காவல் துறையினர் கும்மிடிப்பூண்டியில் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

தப்பி ஓடிய விசாரணை கைதி, மீண்டும் சிறையில் அடைப்பு
தப்பி ஓடிய விசாரணை கைதி, மீண்டும் சிறையில் அடைப்பு

By

Published : Jul 13, 2020, 11:14 AM IST

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி(35). தனது முதல் காதலனை கொலை செய்துவிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த அவரை, ஆரணி நகர காவல் துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ், கைது செய்து விசாரணைக் கைதியாக வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள பெண்கள் தனிச்சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கர்ப்பிணியான கிருஷ்ணவேனி பிரசவத்திற்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த கிருஷ்ணவேணி நேற்று முன் தினம் (11.07.2020) காலை தனது சிறை புடவையை மாற்றிக்கொண்டு, திடீரென மருத்துவமனையில் இருந்து தப்பியோடினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிறை துறைக் காவல் துறையினர், தப்பியோடிய விசாரணைக் கைதி குறித்து வேலூர் வட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து கிருஷ்ணவேணியைப் பிடிக்க வேலூர் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து தேடிவந்தனர்.

இந்நிலையில் தப்பியோடிய கிருஷ்ணவேணி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து விரைந்து சென்று அவரைக் கைது செய்த தனிப்படை காவல் துறையினர், அவரை மீண்டும் தொரப்பாடியில் உள்ள பெண்கள் தனிச்சிறையில் அடைத்தனர்.

மேலும் ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள இச்சமயத்தில் ஒரு மாவட்டம் விட்டு மற்றொரு மாவட்டமான திருவள்ளூருக்கு பெண் கைதி எப்படி தப்பிச் சென்றார்? யாரேனும் உதவினார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details