உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இங்கிலாந்து - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 12ஆவது லீக் போட்டி கார்டிஃப் நகரில் நடைபெற்றது.
இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மொர்டோசா முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜேசன் ராயின் மிரட்டலான சதத்தால் ஆறு விக்கெட்டுகளை இழந்து 386 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, ஜேசன் ராய் 153, ஜாஸ் பட்லர் 64 ரன்களை விளாசினர். வங்கதேச அணி தரப்பில் முமகது சைஃபுதீன், மெஹிதி ஹசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 387 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆடிய வங்கதேச அணியில், ஷகிப்-அல்-ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம் ஆகியோர் மட்டுமே நம்பிக்கை தரும் வகையில் ஆடினர். இப்போட்டியில், சிறப்பாக பேட்டிங் செய்த ஷகிப்-அல்-ஹசன் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 8ஆவது சதத்தை விளாசினார். இதனிடையே, 44 ரன்கள் எடுத்து செட் பேட்ஸ்மேனாக இருந்த முஷ்ஃபிகுர் ரஹிம், ப்ளன்கட் பந்துவீச்சில் நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து வந்த முகமது மிதன் வந்த வேகத்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
இதைத்தொடர்ந்து, அதிரடியாக ஆட முயற்சித்த ஷகிப் 121 ரன்களில், பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் போல்ட் ஆனார். இதனால், வங்கதேச அணி 39.3 ஓவர்களில் 219 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அவரைத் தொடர்ந்து வந்த ஏனைய வீரர்கள், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வரிசையாக பெவிலியனுக்குத் திரும்பினர். இறுதியில் வங்கதேச அணி 48.5 ஓவர்களில் 280 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள்
இங்கிலாந்து அணி சார்பில் ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம், இங்கிலாந்து அணி கடந்த உலகக் கோப்பையில் வங்கதேச அணியிடம் தோல்வி அடைந்ததற்கு தற்போது பழி தீர்த்துக் கொண்டதாக இங்கிலாந்து அணியின் ரசிகர்கள் உற்சாகமாக கூறிவருகின்றனர்.