தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

CWC19: முதல் போட்டியிலேயே அமர்க்களப்படுத்திய இங்கிலாந்து! - உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் 2019

லண்டன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இன்று தொடங்கிய உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

CWC19: முதல் போட்டியிலேயே அமர்களப்படுத்திய இங்கிலாந்து!

By

Published : May 31, 2019, 7:56 AM IST

கிரிக்கெட் திருவிழா எனக் கொண்டாடப்படும், உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டூப்ளஸில் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை குவித்தது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 89, கேப்டன் மோர்கன் 57 ரன்கள் அடித்தனர். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் லுங்கி இங்கிடி மூன்று, இம்ரான் தாஹிர், ராபாடா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 312 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் இழந்தது.

இருப்பினும், மறுமுனையில் நேர்த்தியான பேட்டிங்கை ஆடிய டி காக் 68 ரன்களிலும், வான் டெர் டுசன் 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவரைத் தொடர்ந்து வந்த மற்ற வீரர்களான ஃபிலுக்வாயோ, ராபாடா, ஆகியோர் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வரிசையாக ஆட்டமிழந்தனர்.

இறுதியில், தென்னாப்பிரிக்கா அணி 39.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம், இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியது.

பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து அணி தரப்பில் ஆர்ச்சர் மூன்று, பிளங்கட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இப்போட்டியில் 89 ரன்கள் அடித்ததோடு மட்டுமில்லாமல் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதைத்தொடர்ந்து, நாட்டிங்ஹாம் நகரில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details