சென்னை அடுத்து கிழக்கு தாம்பரம் திருமங்கை மன்னன் தெருவில் வசித்து வருபவர் பிரபு (35). இவர் பொறியாளராகப் பணிபுரிந்துவருகிறார்.
இவர் குடும்பத்துடன் நேற்று (அக். 04) வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகையை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து சேலையூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு நடந்துசெல்வது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைத் தேடிவருகின்றனர்.
மேலும் ஒரு மாத காலமாக புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துவருவதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.