திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 பாதாள சாக்கடைத் திட்டம், கடந்த 2012-13ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டது.
இதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் ஐந்தாயிரம் ரூபாய் முன்பணமும் வணிக நிறுவனங்களுக்கு சுமார் ஒரு லட்சம் வரையிலும் முன்வைப்புத் தொகையாகவும் பெறப்பட்டு மாதந்தோறும் நகராட்சியில் பாதாள சாக்கடைக்கு எனத் தனியாக, வரி வசூலிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, திருவாரூர் நகரம் முழுவதும் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை 15 இடங்களில் துணை சுத்திகரிப்பு நிலையங்கள், ஐந்து இடங்களில் பிரதான சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, ஐந்து நிலைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து, மக்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில், கழிவு நீரை வெளியேற்றி வந்தனர்.
ஆனால், தற்போது இந்த பாதாள சாக்கடைத் திட்டமானது, சமீபகாலமாக சரிவர இயங்காததால், சாக்கடையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல், பள்ளிவாரமங்கலம் என்ற இடத்தில் நேரடியாக பாசன ஆற்றில் கலக்க விடப்படுவதாகவும், பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீருடன் கழிவு நீர் கலந்துவிடுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும் இந்தக் கழிவு நீரானது பள்ளி நகரம், குமாரமங்கலம், புதுச்சேரி, பேட்டைதஞ்சாவூர், பழையவளாகம் உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குப் பாசனமாக விளங்கும் சுக்கனாற்றில் கலக்கிறது.