சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவதால், பூமியின் பார்வையில் இருந்து சூரியன் மறையும். இதுவே 'சூரிய கிரகணம்’ என்று கூறப்படுகிறது.
சந்திரன் பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகிறது. இதனால் சந்திரன் சில நேரம் பூமிக்கு அருகிலும், சில நேரம் பூமிக்கு வெகு தொலைவிலும் செல்கிறது. அது தொலைவில் இருக்கும்போது, பூமியிலிருந்து பார்க்கும்போதும் சந்திரனின் அளவு சிறியதாகக் காணப்படுகிறது. இந்த நேரத்தில் சூரிய கிரகணம் நிகழ்ந்தால், சந்திரனால் முழு சூரியனையும் மறைக்க முடியாது. உச்ச கட்ட கிரகணத்தின் போது மறையாத சூரியனின் விளிம்புப் பகுதிகள், நெருப்பு வளையம்போல் சந்திரனைச் சுற்றியிருக்கும். இதுதான் 'வளைய சூரிய கிரகணம்' எனப்படுகிறது.
இது போன்ற 'வளைய சூரிய கிரகணம்' இதற்கு முன் ஜனவரி 15, 2010 மற்றும் டிசம்பர் 26, 2019 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.
இந்த சூரிய கிரகணத்தை, தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், திருச்சி, கோவை, மதுரை மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் வரும் ஜூன் 21 ஆம் தேதி பார்க்க இயலும்.
சென்னையில் காலை 10:22 மணிக்குத் தொடங்கும் கிரகணம் நண்பகல் 1.41 மணிக்கு முடியும். உச்சகட்ட கிரகணம் பகல் 11:58 மணிக்கு நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய கிரகணத்தை சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்புவதற்கு, 'ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனம்' ஏற்பாடு செய்துள்ளது.
கிரகணங்கள் பற்றி பல்வேறு கற்பிதங்கள் உண்டு. கிரகண நேரத்தில் வெளியே நடமாடக்கூடாது, சாப்பிடக்கூடாது என்ற பல்வேறு கட்டுக்கதைகள் உள்ளன.