கரோனா தொற்று எண்ணிக்கை சென்னையில் அதிகரித்துவரும் நிலையில், தொற்று பரவாதபடி பிரசவத்திற்கென தனி வார்டுகள் அமைக்கப்பட வேண்டும் என அரசு மருத்துவர்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், ஒவ்வொரு நாளும் 35 முதல் 40 வரையிலான பிரசவங்கள் நடைபெறுகிறது. இங்கு பிரசவத்திற்கு என இருக்கும் வார்டுகள், வெளிநோயாளிகளுடன் இணைந்து ஒரே வளாகத்தில் செயல்படுகிறது. இதனால் அங்கு கரோனா தொற்று சிகிச்சைக்காக வருபவர்கள், அவர்களை பார்த்துக்கொள்ள வருபவர்கள் மூலம் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் கருதுகிறார்கள்.
சென்னையில் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை மட்டுமின்றி, கோஷா மருத்துவமனை, கே.எம்.சி, ஸ்டான்லி மருத்துவமனை என அனைத்து மருத்துவமனைகளிலும் பிரசவம் தொடர்பான மருத்துவர்களுக்கு வேறு பணிகள் வழங்கப்படுவதில்லை என்றாலும், பிரசவத்திற்கு வருபவர்களுக்கு தொற்று ஏற்படும் பட்சத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது.