மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுற்றுப்புற கிராமப் பகுதிகளிலிருந்து சிகிச்சைக்காக வந்துசெல்கின்றனர். காய்ச்சல், சளி என்றால் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்காமல் மதுரை இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
'பரிசோதனை செய்ய மாட்டோம்' - மருத்துவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம்
மதுரை: திருமங்கலம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட காவல் சார்பு ஆய்வாளருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய மறுக்கப்பட்டதால், மருத்துவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திருமங்கலம் நகர் காவல் சார்பு ஆய்வாளர் சுந்தரராஜ் கடந்த மூன்று தினங்களாகக் காய்ச்சலால் அவதிப்பட்டுவந்துள்ளார். இந்நிலையில், இன்று திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு வந்த அவர், தனக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய வலியுறுத்தியபோது, பணியிலிருந்த மருத்துவர் பரிசோதனைக்கு எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் அங்கு இருந்தவர்கள் காய்ச்சல் வந்து மூன்று தினங்களாவதால், இன்னும் இரண்டு தினங்களுக்குப் பின்பு வாருங்கள் என்று கூறி, தற்போது சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த அப்பகுதி காவல் ஆய்வாளர் பரமேஸ்வரி, ரத்தப் பரிசோதனை நடத்தப்படும் இடத்தில் இதுதொடர்பாக கேட்டபோது முறையான பதில் கூற மறுத்துவிட்டனர். இதனால் காவல் துறையினருக்கும் மருத்துவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் வந்த பின்பு மருத்துவப் பரிசோதனை செய்ய அனுமதித்தனர்.