தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

எஃப்-1, எம்-1 விசா : இந்திய மாணவர்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல் - எஃப்-1 எம்-1 விசா

டெல்லி : கோவிட்-19 நெருக்கடி சூழலில் இந்திய மாணவர்களை வெளியேற்றும் அமெரிக்க அரசின் முடிவால் இந்திய மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டுமென திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார்.

 எஃப்-1, எம்-1 விசா :  இந்திய மாணவர்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்
எஃப்-1, எம்-1 விசா : இந்திய மாணவர்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்

By

Published : Jul 9, 2020, 10:24 PM IST

கரோனா பரவல் எதிரொலி காரணமாக, அனைத்து பல்கலைக்கழகங்களின் வகுப்புகளும் ஆன்லைன் மூலமே நடத்தப்படுவதால் எஃப்-1, எம்-1 விசா பெற்று அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு இனி ஆன்லைன் வகுப்புகள் மூலமே பாடம் நடத்தப்படும் என்பதால் அவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்திருக்கும் மாணவர்கள் உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது ஆன்லைன் முறையில் அல்லாமல் நேரடியாக மாணவர்களுக்கு கற்பிக்கும் பல்கலைக்கழகங்களில் தங்களை சேர்த்துக் கொள்ள வேண்டுமென அந்நாட்டு குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பிற்குள்ளாகி இருக்கும் இந்திய மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "கல்வி மற்றும் மொழி பயிற்சி வகுப்புகளுக்கான புலம்பெயர்ந்த மாணவர்களுக்கு எஃப் 1 விசா மற்றும் கல்விசாரா அல்லது தொழிற்கல்வி பாடநெறியை செய்ய விரும்புவோருக்கு எம் 1 விசா ஆகியவற்றை அமெரிக்கா வழங்குகிறது.

அமெரிக்காவில் பயின்றுவரும் மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேறினால், அவர்களுக்கு அடுத்த செமஸ்டருக்கு விசாக்கள் வழங்க வாய்ப்பில்லை என அறிய முடிகிறது. அத்தகைய மாணவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றால் அவர்கள் கல்வி வாய்ப்பு பறிபோகும் என்பது உறுதி.

எஃப்-1, எம்-1 விசா பெற்று அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படித்துவரும் மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள திடீர் விதிவிலக்குகளில் தளர்வளிக்க வேண்டும். கோவிட்-19 நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை அதனை உணர்ந்து, ராஜதந்திர தகவல்தொடர்புகளை விரைவுப்படுத்தி அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய மாணவர்கள் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 40 பில்லியன் டாலர் பங்களிப்பு செய்து வருகின்றனர். மேலும், படித்துக்கொண்டே வேலை செய்துவரும் 4 லட்சம் இந்திய மாணவர்களால் நாட்டின் பொருளாதார நிலைமையும் உயர்ந்துள்ளது என்பதை ஆதாரப்பூர்வமாக என்.ஏ.எஃப்.எஸ்.ஏ ஆய்வு தரவு காட்டுகிறது.

சர்வதேச கல்வி நிறுவனத்தின் (IIE) அறிக்கையின்படி, கடந்த 2018-2019 ஆம் ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் பல்வேறு பட்டயம் மற்றும் இளங்கலை பாடத்திட்டங்களின் கீழ், அமெரிக்காவில் படித்துவருகின்றனர் என அறிய முடிகிறது.

அம்மாணவர்களில், கிட்டத்தட்ட முக்கால்வாசி பேர் ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்றும், அதில் சீனர்கள் 48 விழுக்காடும், இந்தியர்கள் 26 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details