தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு காலம் முடிவடைய இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்திருக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லை.
நான்காம் கட்ட ஊரடங்கைவிட, ஐந்தாம் கட்ட ஊரடங்கில் கரோனா பரவல் அதிகமாகி வருவதையே அரசு வெளியிடும் அறிக்கைகளும், அவற்றில் உள்ள தரவுகளும் சந்தேகத்திற்கு இடமின்றிச் சுட்டிக்காட்டுகின்றன.
தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு ஊரடங்கு என்பது முறையாக, ஒழுங்காக அமல்படுத்தப்படாததே காரணம்.
உலகத்திலேயே ஊரடங்கை, இத்தனை ஓட்டை உடைசல்களோடு, இவ்வளவு கேவலமாக அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழ்நாடாகத்தான் இருக்கும். முழு ஊரடங்கு - ஊரடங்கு - தளர்வு ஊடரங்கு - தளர்வில் மேலும் தளர்வு என்று ஊரடங்குச் சட்டத்தையே தரம் தாழ்த்தி, தொடர்ந்து கொச்சைப்படுத்தியது தமிழ்நாடு அரசு.
இந்தியா முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 102 பேர் என்றால், தமிழகத்தில் பலியானவர் எண்ணிக்கை 349 பேர்.
சென்னையில் இராயபுரம் என்ற ஒரு மண்டலத்தில் மட்டும் பலியானவர்கள் எண்ணிக்கை 52 பேர். இது ஜம்மு காஷ்மீர், ஹரியானா, பிகார் மாநிலங்களில் பலியானவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் பலியானவர்கள் 37 பேர்; இது கேரள மாநிலத்தை விட அதிகம். ஒரு மாநிலத்துக்கு இணையாக, சென்னை நகரத்தின் ஒரு மண்டலத்தில் கரோனா பாதிப்பு உள்ளது.
சென்னை கட்டுப்பாட்டு பகுதியில் முழு ஊரடங்கை நிறைவேற்றி, மக்களைக் காப்பாற்றுங்கள். அப்படிச் செய்யும் போது அப்பகுதி மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தையும் அரசே அவர்களின் இருப்பிடம் தேடி வழங்கி, அவர்களுக்கு உதவ வேண்டும். அனைத்துத் தேவைகளையும் வழங்கி, மக்களை வீட்டுக்குள் தனிமைப்படுத்தி இருக்க வைப்பது அரசின் கடமை எனத் தெரிவித்துள்ளார் .