இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கரோனா கிராமப் புறங்களில் படுவேகமாகப் பரவி - சென்னையில் தொடருவது குறித்தும், இதைத் தடுத்து நோயால் பாதிக்கப்பட்டோருக்கு முறையான சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும் மருத்துவ வல்லுநர்களுடன் நடத்திய காணொலிக் காட்சி கலந்துரையாடலின்போது, அவர்கள் தெரிவித்த ஆலோசனைகள் தமிழ்நாடு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவற்றை முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.
அதன்படி மருத்துவ உள்கட்டமைப்புகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும். ஆகவே, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் வழிகாட்டுதல்களைப் பொதுவானவையாகக்கொண்டு - தமிழ்நாடு கரோனா தொற்று சூழ்நிலைக்கு ஏற்ப அரசே நோய்த் தடுப்பு- சிகிச்சை உள்ளிட்டவை தொடர்பான, செயல்முறைக்கேற்ற முடிவுகளை எடுக்க வேண்டும்.
மேலும் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை தொற்று ஏற்பட்ட நிலையிலும், சமூகப் பரவல் குறித்து முறைப்படி ஆய்வு மேற்கொள்ளத் தனியாக ஒரு வல்லுநர் குழுவை நியமித்து, அறிக்கை பெற்று உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொலைநோக்குச் சிந்தனையோடு, கரோனா மருத்துவக் கொள்கை ஒன்றை வகுத்துச் செயல்படுத்தி, அனைத்து மாவட்டங்களிலும் நோய்ப் பரவலைப் போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.