கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பின்னர், சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி நேற்று (ஜூன் 1) முதல் கடலூரில் 50% பயணிகளுடன் அரசுப் பேருந்து சேவை தொடங்கியது.
இதனை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், கடலூர் பேருந்து நிலையம் சென்று இன்று (ஜூன் 2) ஆய்வு செய்தார். கடலூர் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த காய்கறிக் கடைகள், கடலூர்-சிதம்பரம் செல்லும் சாலையில் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.
அந்தக் காய்கறி சந்தையைப் பார்வையிட்ட பின்னர், சிதம்பரம் செல்வதற்காக காரில் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் சித்திரப்பாவை என்ற பெண், அவரது மகன் சுஜித் உடன் இருசக்கர வாகனத்தில் கோ-ஆப்டெக்ஸ் கடை அருகில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஒரு கார் எதிர்பாராத விதமாக, அப்பெண்ணின் இருசக்கர வாகனத்தில் மோதி நிற்காமல் சென்றது. இதனால் நிலைதடுமாறி, இருவரும் கீழே விழுந்தனர். இதில் அவர்களுக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன.