பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான விடுபட்ட தேர்வும் ரத்து செய்யப்படுகிறது என அரசு அறிவித்தது. அந்த மாணவர்கள் அனைவரும் காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் எனவும், வருகைப்பதிவின் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடத்தினை எழுதாத மாணவர்களுக்குரிய காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் பெற்று அனுப்ப வேண்டும் என அரசு தேர்வுத் துறை அறிவுரை வழங்கியிருந்தது. தனியார் பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு வர வைத்து புதிதாக விடைத்தாள்களை எழுதச்சொல்லி ஒப்படைப்பதாக புகார் எழுந்தது.
இது குறித்து அரசு தேர்வுத் துறை இயக்குநர் பழனிசாமி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், "பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான 2019 மார்ச், ஏப்ரல் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்வுக்குரிய காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் பெறுவது தொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டது.
பத்து, பதினோராம் வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு கூறிய விடைத்தாள்கள் சேகரிப்பு தொடர்பாக மாணவர்களையோ, மாணவர்களின் பெற்றோர்களையோ எக்காரணம் கொண்டும் பள்ளிக்கு வர வைக்கக் கூடாது. விடைத்தாள் சேகரிப்பு பணிகளுக்கோ, ஒப்படைக்கும் பணிகளுக்கு மாணவர்களையோ, அவர்களது பெற்றோர்களையோ பயன்படுத்தக்கூடாது என திட்டவட்டமாக கூறப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.