திண்டுக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று நிலவரப்படி 730 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 365 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
மீதமுள்ள 358 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனை, பழனி சாலையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி வளாகம், கரூர் சாலையில் உள்ள எம்.வி.எம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே திண்டுக்கல் எம்.வி. எம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள தனிமைப்படுத்தும் முகாமிலிருந்து பெண் ஒருவர் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த காணொலியில், "கரோனா சிகிச்சை மையமான இங்கு குடிநீர், உணவு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் சரிவர செய்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக தரமற்ற உணவுகள் வழங்கப்படுகிறது.
இங்கு பணியில் இருப்பவர்கள் எங்களைத் தீண்டத்தகாதவர்கள் போல நடத்துகிறார்கள். அவர்களது அச்சம் சரியானதாக இருந்தாலும் அது எங்களை மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. ஏற்கனவே நோய்த்தொற்றின் காரணமாக அதிக மன உளைச்சலில் உள்ளோம்.
இதே நிலை நீடித்தால் நாங்கள் குணமடைந்து வீடு திரும்ப முடியாது. மாறாக மன நோயாளிகளாகவே வீடு திரும்ப வேண்டியிருக்கும்" என வேதனை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மின்விசை நிதி நிறுவனத்தின் புதிய வலைத்தளம் தொடக்கம்..!