திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கரந்தமலை அடிவாரத்தில் உள்ளது ஜக்கமநாயக்கன்பட்டி. அங்கு தனக்கு சொந்தமான தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் அழகர்சாமி என்னும் நபர், தனது தோட்டத்தில் குதிரை ஒன்றை வளர்த்து வருகிறார்.
வீட்டுத் தோட்டத்தில் புகுந்து காட்டு மாடுகள் தாக்கியதில் குதிரை பலி - Dindigul horse death
திண்டுக்கல் : நத்தம் அருகே வீட்டில் வளர்க்கப்பட்ட குதிரையை காட்டு மாடுகள் தாக்கிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு அழகர்சாமி குதிரையை தனது வீட்டின் அருகே வழக்கம்போல் கட்டிவைத்துவிட்டுத் தூங்கிய நிலையில், இன்று (செப்.19) அதிகாலை நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியில் சென்று பார்த்துள்ளார். அப்போது அவரது தோட்டத்திற்குள் இரண்டு காட்டு மாடுகள் புகுந்திருந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அந்த மாடுகளை விரட்ட அவர் முயன்றுள்ளார். இதில் மிரண்டு ஓடிய காட்டு மாடுகள், அங்கு கட்டப்பட்டிருந்த குதிரையைத் தாக்கியுள்ளது. இதில் அக்குதிரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கும் காவல் துறையினருக்கும்தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, குதிரை அதே இடத்தில் உடற்கூறாய்வு செய்து புதைக்கப்பட்டது.
வீட்டிற்குள் காட்டு மாடு புகுந்து குதிரையைத் தாக்கிக் கொன்றது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.