கரோனா பாதிப்பு காரணமாக அரசு அலுவலகங்கள் 50 விழுக்காடு பணியாளர்களைக் கொண்டு திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் ஆறு நாள்கள் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு அரசாணை எண் 288, வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை, அரசு அலுவலகங்களுக்கு மாதம்தோறும் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை அளித்து கிருமி நாசினியால் சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள அலுவலகங்கள், பள்ளிக் கட்டடங்கள், அரசுக்கு சொந்தமான கட்டடங்கள் ஆகியவற்றை மாதம்தோறும் இரண்டாவது சனிக்கிழமையன்று கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும் என ஆட்சியர் மலர்விழி அறிவுறுத்தியிருந்தார்.
இதையடுத்து, நேற்று (ஜூன் 13) அரசு அலுவலகங்களில் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு, கிருமி நாசினி தெளித்து நோய்த் தடுப்பு நடவக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலக கட்டுப்பாட்டு அலுவலர்கள் கண்காணித்தனர். ஆட்சியா் அலுவலகம், மாவட்டத்திலுள்ள ஊராட்சி, பேரூராட்சிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.