சென்னை:தமிழ்நாட்டில் ரவுடிகள் கலாச்சாரத்தை முழுமையாக ஒழிக்க புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை அயனாவரத்தில் இரண்டு ரவுடி கும்பலுக்கு இடையில் நடந்த மோதலில், ஜோசப் என்ற ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, அந்த இரு தரப்பைச் சேர்ந்த ரவுடிகளும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, இந்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள வேலு என்பவர் தன் மீதான வழக்கை ரத்துச் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நடைபெற்று வருகிறது.
முன்னதாக நடைபெற்ற விசாரணையின்போது, தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு ரவுடி குழுக்கள் குறித்த விவரங்கள், ரவுடிகளைக் கட்டுப்படுத்த காவல்துறையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டி.ஜி.பி விளக்கம் அளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று(அக்.1) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "தமிழ்நாட்டின் ரவுடிகளுக்கு எதிராக பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதைத் தீவிரப்படுத்தும் வகையில் ரவுடிகள் கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் முழுமையாக ஒழிக்க புதிய சட்ட முன் வரைவு மசோதா ஆய்வு குழுவினரால் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் புதிய சட்ட வரைவு மசோதா எப்போது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.