தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திவந்த பெனிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் இருவரையும் காவல் துறையினர் கைது செய்த நிலையில் கோவில்பட்டி கிளைச் சிறையில் கடந்த 21ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான முறையில் மரணம் அடைந்தனர்.
இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி நீதிபதியிடம் வலியுறுத்தினர்.
இருப்பினும் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு இன்றுதான் உறவினர்கள் உடலை வாங்க சம்மதித்தனர்.
இதையடுத்து, இன்று மாலை இருவரின் உடல்களும் திருநெல்வேலி மாவட்ட அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து எடுத்து செல்லப்பட்டு சாத்தான்குளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது
இந்த சம்பவத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி கோவில்பட்டி நீதிமன்ற நடுவர் பாரதிதாசன் உயிரிழந்த இருவரின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் தான் இருவரின் உடல்களும் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக விரைவில் நீதிபதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்
கரோனோவால் பலர் செத்து மடியும் இந்த காலகட்டத்தில் சிறையில் வைத்து ஒரு குடும்பத்தின் இரண்டு ஆண்மகன்கள் உயிரிழந்தசம்பவம் தமிழ்நாடு காவல்துறை மீது பொதுமக்கள் மத்தியில் பெரும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் திருநெல்வேலி மாநகர துணை காவல் ஆணையர் சரவணன் இன்று தனது சமூக வலைதளப் பக்கங்களில் வருத்தமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "மாற்றம் ஒன்றே மாறாதது என்ன சொல்ல முடியும். இது என்றும் மாறாத வடு என்றும் அழியாத கரை மன்னிக்க முடியாத குற்றம்.
இனி இதுபோல் நடக்கக் கூடாத குற்றம். நான் கண்ட கனவுகள் நொருங்கியது கட்டிய கோட்டைகள் தகர்ந்தது இழப்பதற்கு இனி எதுவுமில்லை. ஆனால் அடைவதற்கு ஒரு லட்சியம் இருக்கிறது.
இதுவே இறுதி அது உறுதி. பத்தாயிரம் மயில் பயணங்கள் முதல் அடியில் இருந்து தொடங்குகிறது. நான் விரும்பும் மாற்றம் என்னிடம் இருந்து தொடங்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதாவது துணை ஆணையரின் இந்த பதிவு சாத்தான்குளம் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதை போன்று அமைந்துள்ளது.
இதுபோன்ற விவகாரத்தில் தமிழ்நாடு காவல் துறையில் பெரும் மாற்றம் செய்யப்படுவதாக தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். மேலும் அந்த மாற்றம் தன்னிடம் இருந்து வரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:நிலத் தகராறு: முதியவரின் வீட்டை இடித்த உறவினர்கள்